274 சிவதரிசனம்  ஆன்மீகப் பயணம் - 3 

                                                நாள் : 11.082024 ஞாயிறு

 ஓம் நமச்சிவாய

முன்னுரை :

ஓம் நமச்சிவாய ...

சிவபெருமானின் மீது  கொண்ட அளவற்ற அன்பு பக்தி ஏதோ ஒரு ஈர்ப்பு இனம் புரியாத ஆவல் பலமுறை பல தலங்களுக்கு சென்று வந்தாலும் இறைவனின் மீது ஒன்ற முடியாத தவிப்பு பலமுறை பல புத்தகங்கள் படித்தாலும்  நினைவில் நிற்க்காத குழப்பம் இறைவன் எழுந்தருளியுள்ள எல்லா கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் அந்த கோயில்களில் இருக்கும் இறை உணர்வை உணர வேண்டும் அவ்வாறு உணர்வதே இந்த பிறவியில் நான் பெற்ற மிகப்பெரும் பாக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எனது  எண்ணம்.

இந்த பிறவியில் பிறப்பும் எனது கையில் இல்லை இறப்பும்  எனது கையில் இல்லை . இந்த இடைப்பட்ட காலத்தில் இறைவனை உணர வேண்டும். படைப்பின் நோக்கத்தை அறிய வேண்டும், மரணம் இல்லா பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசையில் சைவ சமய குறவர்கள் திருநாவுக்கரசர் , திருஞான சம்பந்தர் (அப்பர்) சுந்தரர் , மாணிக்கவாசகர்  இவர்களால் பாடப்பெற்ற தேவார கோயில்கள் என்று கூறக்கூடிய உலகத்தில் உள்ள 274+ கோயில்களுக்கும் சென்று இறைவனை தொழ வேண்டும் கண்ணார காண வேண்டும் என்பதுதான் எனது  ஆன்மீக குறிக்கோள்.

இறைவனின் படைப்பை ஒவ்வொரு தருணத்தில் உணர்ந்து இவனின்றி இந்த செயலை எவர்  ஒருவராலும் செய்ய முடியாது அவரின்றி ஒரு அணுவும் அசையாது எனத் தோன்றும் போது மெய் சிலிர்க்கும்.

274 சிவா ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும் என்ற பேராவல் எங்கு தோன்றியது என்று எனக்கு நினைவில்லை ஆனால் இந்த தரிசன ஆவல் பல காலம் என்னுள் தீயாய் இருந்து கொண்டிருக்கிறது, காலம் வரும்போது இறைவன் அதற்கான வழியையும் கொடுப்பான் என்று இருந்தேன். அடிக்கடி நண்பர்களுடன் பேசும் பொழுது 274 சிவாலயங்களுக்கு செல்ல வேண்டும் அதன் சிறப்புகள் மற்றும் அனுபவங்களை அனைவருக்கும் பகிர வேண்டும்  இதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஒரு கார் இருந்தால் வசதியாக இருக்கும் என்று பல சமயம் கூறியிருக்கிறேன் .

இதனை அறிந்த இறைவன் என்னுடைய ஆசையினை பூர்த்தி செய்து வைக்க எளிதாக என்னை அனைத்து கோவில்களுக்கும் செல்ல ஏதுவாக எனக்கு நான்  விரும்பியவாறு  மகிழுந்தியை (கார் ) அளித்தான்.ஆனால் தனியாக செல்வது என்பது அவ்வளவு சாத்தியமாக இருக்காது என்பது எனது இறை விண்ணப்பம் இதனை உணர்ந்த இறைவன் என்னுடன் பயணிக்க சில நண்பர்களையும் என்னுடன் இணைத்தான். அந்த இரைவுள்ளம் கொண்ட நண்பர்கள் திரு ஜெயமணி , திரு சரவணன், திரு சுந்தரபாண்டியன் மற்றும் திரு வேலு ஆகிய இறையுணர்வு கொண்ட நண்பர்களுடன் இணைந்து இதுவரை மூன்று சுற்றுக்களாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள இறைவனின் தரிசனம்   கிடைக்கப்பெற்றேன்.

இந்த  ஆன்மீக பயணத்தின் அனுபவத்தினை இந்த பதிவின் மூலமாக விவரித்து இது பலருக்கு பயன்படும் வகையில் இருந்தாலும் பிற்காலங்களில் இந்த பதிவை நான்/நாங்கள் படிப்பதன் மூலம் என்/எங்கள் இறை பயணங்களின் நினைவுகளை  மனக் கண்ணில் கொண்டு வந்து ஆனந்தம் பெறலாம் என்ற ஆசையில் இதனை பகிர்கிறேன்.

 274 கோயில்களின் இறை பயணத்தின் மூன்றாம்சுற்று பயண அனுபவம்

10.08.2024 சனிக்கிழமை மாலை 8.30 மணிக்கு எனது வீட்டில் இருந்து கிளம்பி நேராக கோட்டை மாரியம்மன் கோயில் சென்று அம்பாளின் தரிசனம் பெற்று  பயணத்தை தொடங்கினேன். இந்த முறை கரூர் மற்றும் திருச்சி காவிரி கரை ஒட்டிய தென்கரை மற்றும் வடகரை பகுதியில் உள்ள கோவில்களில் தரிசனம். மொத்தம் எட்டு கோயில்களை ஒரே நாளில் தரிசனம் செய்வது தான் திட்டம் வழக்கம் போல என்னுடன் திரு ஜெயமணி, சரவணன், சுந்தரபாண்டியன் மற்றும் வேலு ஆகியோர்கள் இணைந்து கொண்டார்கள்.

 இந்தமுறை ராயக்கோட்டை வழியாக பயணம் செய்தோம் .அனைவரும் கிளம்பியவுடன் உறங்கினாலும் நானும் சுந்தரபாண்டியனும் நேரம் ,கனவு குறிக்கோள் , கடவுள் நமக்கு கொடுத்த பரிசு பொன்னான நேரம் அதனை வீணடிப்பது கடவுள் கொடுத்த பரிசினை அவமதிப்பது போன்ற சிந்தனையுடன் விவாதித்து கொண்டு பயணம் செய்தோம் .இதில் அதிசயம் என்னவென்றால் திருப்பைஞ்சலி அடையும் பொது எனது கார் 20.5KMPL தந்து இருந்தது ..

முதலில் திருப்பைஞ்சலி கிராமத்தினை 11ஆம் அதிகாலை 2:30 மணிக்கு அடைந்தோம். கிராமம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது . நாய்கள் எங்களது வண்டியை பார்த்து குறைத்தது. அமைதியான ஊர் எங்காவது தூங்குவதற்கு இடம் கிடைக்குமா என்று கோயிலை சுற்றி இரண்டு முறை காரில் வலம் வந்து பார்த்தோம் .கோயிலின் காம்பவுண்ட் சுவர் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது . இரண்டாவது முறை வலம் வரும்போது அந்த ஊரின் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வசதியாக பட்டது காரினை உட்புறமாக பார்க்கிங் செய்துவிட்டு அங்கு இருந்த வராண்டாவில் அனைவரும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டோம் .

 கொசு அதிகமாக இருந்தது இருந்தாலும் களைப்பு தீர்வதற்காக இரண்டு மணி நேரம் தூங்கினோம் . ஜெயமணி ஐந்து மணிக்கு எழுந்து விட்டார் அங்கு வந்த பால்காரரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு குளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து பின்பு எங்களை எழுப்பினார். அவரின் உதவியுடன் அனைவரும் அந்த பைப்பில் இருந்து குடத்தில் தண்ணீரைப் பிடித்து அங்கேயே குளித்து தயாரானோம்.பால்காரருக்கு நன்றிகூறி விட்டு காலை ஆறு மணிக்கு கோவிலின் நுழைவு கோபுரத்தின் வழியாக சென்று உட்புறத்திலேயே காரினை பார்க்கிங் செய்துவிட்டு பிரம்மாண்டமான கோயிலின் உள்ளே அடைந்தோம். 

கோபுரங்கள் மொட்டையாக இருந்தது வேலைபாடுகள் எந்த நூற்றாண்டிலோ பூர்த்தி அடையாமல் அப்படியே விடப்பட்டிருந்தது நேராக இறைவன் நீலிவனேஸ்வரர் தாயார் விசாலாட்சி நீர் நெடும் தென் நாயகி தரிசனம் செய்துவிட்டு அதனை சுற்றி இருந்த ஏழு தீர்த்தங்களையும் பார்த்துவிட்டு இத்தளத்தின் தல விருச்சமான கல் வாழை அங்கு சென்று வணங்கிவிட்டு அங்கிருந்து சுற்று பிரகாரத்தில் இருக்கும் எமனுக்கான சிறப்பு கோயிலையும் தரிசனம் செய்துவிட்டு இந்த முறை நாங்கள் தரிசனம் செய்யும் எல்லா கோயில்களிலும் ஒரு மரத்தினை நட வேண்டும் என்று மரக்கன்றுகளையும் எடுத்துச் சென்று இருந்தோம் தரிசனம் முடித்த பிறகு வெளிப்பிரகாரத்தில் உள்ள நந்தவனத்தில் அரச மரத்தினை செடியை அனைவரும் ஒன்றுசேர்ந்து நாங்கள் எடுத்து சென்றிருந்த கடப்பாரை கொண்டு நன்றாக குழி தோண்டி தேவையான தண்ணீர் விட்ட நிகழ்ச்சி மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த கோவில் பல்லவர் காலக் கோயிற்கட்டிட அமைப்பைக் கொண்டுள்ளது.பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்களில் இது சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இக்கோவிலில் தலமரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது.நீலகண்டனார் சிதம்பரத்தில் தாம் கொண்டிருந்த ஆடலரசன் கோலத்தை வசிட்ட மாமுனிக்கு இத்தலத்திலேயே காட்டியமையால், இது மேலச் சிதம்பரம் எனலானது.

பைஞ்ஞீலி மகாதேவர் மற்றும் பைஞ்ஞீலி உடையார் ஆகிய பெயர்களில் இது சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.

கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றென்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார்.

 திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்தத் தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.எமனுக்கான சிறப்புச் சந்நிதி உள்ளமையால், இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.

நித்தமும் இரவில் நடராசப் பெருமானை வணங்கும் வசிட்ட மாமுனி, ஒரு முறை இங்கு வந்து இரவில் இங்கு தங்க நேர்ந்தமையால், இறைவனார் அவருக்கு தமது ஆடலரசன் தோற்றத்தினை இவ்விடத்திலேயே காட்டியருளினார்.

 அப்பர் பெருமான் இத்தலத்துக்கு வர விரும்பி நடக்கையில் வழி தவறி நிற்கையில், சிவனே அந்தணர் வடிவில் அவரது பசியாற்ற கட்டுச்சோறு அளித்து இத்தலத்திற்கு வழிகாட்டுவித்தார். "சோற்றுடைய ஈஸ்வரன்" என்னும் பெயர் கொண்டு அவருக்கு இத்தலத்தில் ஒரு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.

திரு ஆனைக்காவினைப் போன்று ஐந்து பிரகாரங்கள் கொண்ட இத்தலத்தில், ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை விசாலாட்சி, எமன், கல்யாணி, அக்னி, தேவ, அப்பர் மற்றும் மணியங்கருணை என்பனவாகும்.இத்தலம், சம்பந்தர், சுந்தரர் மற்றும் அப்பர் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமாகும்.

ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது மெய்யனுபவமாக விளங்கும்.

திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய தலங்களையடுத்து, திருநாவுக்கரசர் இத்தலம் நோக்கிவந்தபோது தண்ணீரின் தாகமும், பசியும் அவரை வாட்டின. அவருடைய களைப்பைப் போக்க எண்ணிய சிவபெருமான் அவர் வரும் வழியில் ஒரு குளத்தையும், தங்கி இளைப்பாறுவதற்காக ஒரு மண்டபத்தையும் உருவாக்கி கட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் வடிவில் காத்துக்கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி இறைவன் கூற, அப்பரும் அவ்வாறே செய்தார். அந்தணரிடம் அவர் எங்கு செல்கின்றார் என்று அப்பர் கேட்க, தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூறவே இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி கோயிலின் அருகில் வந்தவுடன் அந்தணர் மறைந்தார்.

அப்போதுதான் இறைவனே அந்தணராக வந்து, உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார். ஞானசம்பந்தருக்கு இறைவன் பொதிசோற்றினை திருக்குருகாவூர் கோயிலில் கொடுத்தார்.இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் மனநிறையுடன் தரிசனம் செய்து அடுத்த கோயிலுக்கு கிளம்பினோம்.



 

 திருவாசி

அடுத்து திருவாசி என்ற தளத்திற்கு  கிளம்பினோம்  இந்த தளம் திருப்பைஞ்சலியிலிருந்து கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது  18 நிமிஷம் பயணம்  துடையூர் வழியா திருச்சி சேலம் மெயின் ரோடுல துடையூர் இல் இருந்து 2 கிலோமீட்டர்  தூரத்தில் திருவாசி பிரம்மபுரீஸ்வரர் கோயில் காலை 7:30 க்கு கோவிலை அடைந்தோம்.


இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.சிவாலயத்தின் எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும் அதில் கருப்பண்ணசாமி சன்னதியும்உள்ளது. அக்கோயிலின் அருகே மதுரை வீரன் சன்னதியும் அமைந்துள்ளது.

இச்சிவாலயம் அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

சுந்தரர் தன்னுடன் சிவதல யாத்திரைக்கு வருகின்ற சிவனடியார்களுக்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறு உணவு படைக்க சிவபெருமானிடம் பொன்னையும் பொருளையும் பெற்றுக் கொள்வார். ஆனால் இத்தலத்தில் சுந்தரர் பொற் பதிகம் பாடியும் சிவபெருமான் பொன்னைத் தரவில்லை. சுந்தரர் கோபம் கொண்டு பாடல்களைப் பாடினார். அதன்பின்பு சிவபெருமான் பொன்னை தந்தார். பிறகு அந்தப் பொன் சுத்தமானதா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இருவர் அந்தப் பொன்னை சோதித்து அதன் தரத்தினை உரைத்தனர். சிவபெருமான் தன்னை இகழ்ந்து பாடினாலும் பொன் தருவார் என்பதை சுந்தரர் அறிந்தார். பொன்னை உரைத்து தரத்தை உரைத்த இருவரும்மறைந்தனர். அவர்கள் சிவபெருமானும் திருமாலும் என சுந்தரர் அறிந்தார். மேலும் கொல்லிமழவன் மகளைத் தாக்கிய நோயை மடக்கி ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார் ஈசன். இதனால் இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன்

உருவம் இல்லாமல் நாகத்தின் மீது நடனமாடுகின்றார் என்பது இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு. வன்னி தலமரம். அன்னமாம்பொய்கை, சிலம்பாறு தீர்த்தமாக உள்ளன.

அடர்ந்த வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் பராசக்தி, பிரம்மன், திருமகள், அகத்தியர் ஆகியோர் 'சமீவனேஸ்வரர்' என்ற திருநாமம் கொண்ட ஈசனை வணங்கி வந்தார்கள்,

ஒருமுறை அம்பிகையின் கேள்விக்கு பதில் உரைத்த ஈசனார், 'வேதங்களும் வேத பண்டிதர்களும் தவமியற்றும் இந்த திருப்பாச்சிலாச்சிராமமே என் விருப்பத்துக்குரிய தலம்' என்று சொன்னார். அதன்படி தேவியானவள் இங்கு அன்னப்பறவையாக உருவெடுத்து வந்து 'அன்னமாம் பொய்கை' என்ற தீர்த்தத்தில் வளர்ந்து ஈசனை வணங்கி அருள் பெற்றார் என தலவரலாறு கூறுகிறது.

கர்மவினைகளால் தான், நம்மை நோய்கள் பீடிக்கின்றன. அந்த கர்மவினைகளை அடியோடு களைந்து நம்முடைய தீராத நாட்பட்ட வியாதிகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்த இத்தலம் வந்து வழிபட்டு, சம்பந்தரின் பதிகம் பாடி வழிபட தீராத நோய்களும் அடியோடு நீங்கும்.


கல்லில் தூண் செய்து,அதன் நடுவே ஒரு உருளை ஏற்படுத்தி அந்த உருளை சுழல ,மூன்று பக்கமும் இடைவெளி விட்டு அதனை சுழலும் விதமாக செய்திருப்பது மிகவும் அதிசயம். இந்த முறை பார்க்கும் கோயில்களில் மரக்கன்று நட வேண்டும் என்ற எங்களின் ஆவலில் இந்த கோவிலிலும்உள்ளே உள்ள நந்தவனத்தில் அரச மரத்தினை நட்டு அதற்கு நீர் அளித்து மிக்க மகிழ்ச்சியுடன்  கோயிலுக்கு வெளியே வந்தோம். வெளியே இருந்த சிறிய உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு அங்கிருந்து அடுத்த தலமான திருப்பராய்த்துறைக்கு கிளம்பினோம்.

 திருப்பராய்த்துறை

திருவாசியில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் 20 நிமிஷம் பயணம் சென்றால் முக்கொம்பு பாலம் குறுக்கே கடந்து கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் இணைந்தால் சாலையின் ஓரத்திலே இந்த கோயிலை காணலாம். கோவிலின்  வாய் கோபுரத்தின் வழியாக  உள்ளே சென்று காரினை பார்க்கிங் செய்து விட்டு பார்த்தால் கோவிலில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

 திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.இறைவன் பிட்சாடனராய் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள மூன்றாவது சிவத்தலமாகும்.

எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. பராய் மரம் சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.

இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.

ஒரு காலத்தில், பராய் மரங்கள் நிறைந்த தலமாக இவ்வூர் திகழ்ந்ததால், பராய்த்துறை என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தலவிருட்சம் அரிய வகை பராய் மரம். மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் வெளிப்பிராகாரத்தில் உள்ள இத்தல விருட்சம், புற்றுநோயையும் மற்றும் எளிதில் குணப்படுத்தமுடியாத சிலவகை தோல் நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

 பராய் மரத்தின் இலையானது சீதபேதி மற்றும் ரத்தபேதியைக் குணமாக்கும். பராய் மரத்துப் பால், கால் வெடிப்புகளைச் குணமாக்கும். இத்தகைய நோய்களால் பீடிக்கப்பட்டு, குறிப்பாக புற்றுநோயினால் வருந்தும் மக்கள், இத்தல விருட்சத்துக்கு நீரூற்றி, தீபம் ஏற்றி, தூபம் காட்டி, வலம் வந்து வணங்கினால் இந்நோய் நிவர்த்தியாகும் அல்லது கட்டுப்படும் எனத் தல வரலாறு தெரிவிக்கிறது.புற்றுநோய்க்கு நிவர்த்தித் தலமான திருப்பராய்த்துறையில் சுயம்பு லிங்கமாக உறையும் இறைவன் தாருகாவனேஸ்வரர் மற்றும் இறைவி ஹேமவர்ணாம்பிகையை வழிபட்டுப் பலன் பெற்றவர்கள் பலர்.

இத்தலம், அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஒரு திருப்புகழ் தலம். இங்கு முருகப்பெருமான், ஆறுமுகமும் 12 திருக்கரங்களும் கொண்டு, வள்ளி தெய்வானை அருகில் இருக்க, மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார். உற்சவரும் இதே அமைப்பில் உள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது.முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

இத்திருக்கோயிலில் சம்பந்தர், அப்பர்,  மாணிக்கவாசகர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,  இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் ஆகியோர் வழிபட்டு இருக்கிறார்கள்.இந்த தலத்திலும் மரத்தினை நடுவதற்காக முயற்சி செய்யும் பொழுது அங்கு அரச மரத்தை நடக்கூடாது அதன் வேர்கள் கோவிலின் சுற்றுச்சுவரை  பாதிக்கும் என்ற காரணத்தினால் அந்த கோயிலில் பாதாம் மரத்தினை நட்டு அதனை  பராமரிக்கும் ஊழியர்களிடம் நீர் விட்டு வளர்க்க விண்ணப்பம் வைத்துவிட்டு அந்த கோவிலில் இருந்து அடுத்த கோவிலுக்கு கிளம்பினோம்.












கடம்பர் கோவில் குளித்தலை

திருப்பராய்த்துறையிலிருந்து  8.5 கிலோமீட்டர் 15  நிமிஷம்  முக்கிய சாலையில் வந்தால் கோவிலை  அடையலாம். கடம்பர் கோவில் குளித்தலை. இந்த கோயிலை நெருங்கி  காரை ஓரமா நிறுத்தி விட்டு  கோயிலுக்குள்ள சென்றால் கோவில் மூடிக்கொண்டு இருந்தார்கள் ,அந்த தெருவில்  ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதால்   சாயங்காலம் நாலு மணிக்கு மேல தான் நீங்க பார்க்க முடியும்  என்றார்கள். என்ன ஒரு சோதனை இந்த கோயிலை தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் வந்தது வந்து விட்டோம்.


கோவிலின் பிரகாரத்தை சுற்றி விட்டு செல்வோம் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு இருந்தால் இந்த கோயிலை தரிசனம் செய்வோம் என்று முடிவு செய்து கோயிலை சுற்றி அப்படியே பின்னாடி வந்து அந்த கோயிலில் இருந்த நாவல் பழ மரத்தில் நாவல் பழத்தை பொறுக்கி சுவைத்துவிட்டு   அங்கிருந்து கோயிலை விட்டு வெளியே வந்து ஒரு போட்டோ எடுத்துவிட்டு இறைவா மீண்டும் ஒரு தரிசனம்  கொடுப்பாய் என்று வேண்டிக்கொண்டு அங்கிருந்து அடுத்த கோயிலான திருவார்போக்கி அய்யர் மலைக்கு கிளம்பினோம்.

காலையில் கடம்பர் மதியம் அய்யர் மலை சாயங்காலம் திரியுங்கோர் மலை தரிசனம் சிறப்பு என்பதால் சரியாக 11:10க்கு திருப்பராய்த்துறை அய்யர் மலையின் அடிவாரத்திற்கு அடைந்தோம். சரியான வெயில் காரினை ஓரமாக நிறுத்தி விட்டு  அடிவாரத்தை அடைந்தோம்.


அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில்

அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை. 

ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினான். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் உள்ளது.

கோவில் அடிவாரம் வழியாக ஏறும் பொழுது நிறைய கூட்டம் எங்கு பார்த்தாலும் காதுகுத்து மற்றும் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன இந்த ஊர் மக்களுக்கு நிறைய பேருக்கு இந்த கோயில்தான் குலதெய்வமாக இருக்கின்றது இது கோவிலின் படி ஏறும் பொழுது கோவிலில் உள்ள ஒரு கொடிமரம் போன்ற ஒரு இடத்தில் பில்லி சூனியம் போன்றவற்றுக்கு பரிகாரங்கள் செய்யப்பட்டு ஒரு நூலால் இந்த கொடி மரத்தை சுற்றி சில மந்திரங்களை கூறி தனது வேண்டுதலை செய்து கொண்டிருந்தனர். கடுமையான வெயிலில் படிகள் அனைத்தும் சூடாகி இருக்கின்ற நேரத்திலே மலை  ஏறும் பொழுது தண்ணீர் தேவை ஏற்படும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை ,ஒரு வழியாக படியை கடந்து கடந்து  ஏறும் போது மிகுந்த கடுமையான தண்ணீர் வறட்சி இரண்டு போர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்துக் விட்டு நின்று நின்று சிரமப்பட்டு 1140 படிகள்ஏறினோம் .

இந்த தமிழ்நாடு அரசு சமீபத்தில் தான் கேபிள் கார் வசதியை ஏற்படுத்தி கொடுத்திருந்தது ஆனால் அன்று கேபிள் கார் பராமரிப்பு காரணத்திற்காக இயக்கப்படவில்லை. நிழலுக்காக ஆங்காங்கே போடப்பட்டிருந்த மண்டபத்தில் தங்கி தங்கி ஒரு வழியாக கன்னிமார் கோவில் மற்றும் குகை  பகுதியை நிறைய குரங்குகள் நடமாடிக் கன்னிமார் கோயில் குகையின் சிறப்பு தெரியாததால் நாங்கள் அதன் உள்ளே செல்லாமல் நேராக மேலே  ஏறினோம். இந்த மலைக்கு குழந்தைகள் முதியவர்கள் திருமணம் ஆனவர்கள் போன்ற அனைத்து வயதினரும் ஏறிக் கொண்டுதான் இருந்தார். இந்த மலைக்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள் இந்த வேலையை தொன்று தொட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஏறும் பொழுது கூட ஒருவர் குடத்தில் தண்ணீரை எடுத்துச் சென்று கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. .இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம்செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.

இந்த கோயிலில் சுற்று வட்டாரத்தில்              காகங்கள் பறக்காது என்பது ஐதீகம்.மலை உச்சியை தொட்ட பிறகு முதலில் தரிசனம் கொடுப்பது தாயார் சுரும்பார்குழலி அம்மன் . அம்பாளை  முதலில் தரிசனம் செய்துவிட்டு அதன் பிறகு ஒரு 20 படி ஏறினால் அங்கு  ஒரு மண்டபம் நம் மண்டபத்தில் நாயன்மார்களின் சிலைகள் கொடி மரத்தின் அடிப்பகுதி மட்டும் அங்கு இருந்தது ஒன்றும் புரியவில்லை அந்த சந்தேகத்தோடு அதனை தரிசனம் செய்து கொண்டு அடுத்து ஒரு பத்து படி ஏறினோம்.  கோவில் அரசு மூலம் சீரமைக்கப்பட்டு கொண்டிருந்தது நாங்கள் ஏறிய நேரம் சரியான நேரம் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு வழியாக உள்ளே உட்கார்ந்து பூஜைகளை பார்த்துவிட்டு உடனடியாக மூலவரான இறைவனின் அனைத்து அபிஷேகங்களையும் கண்ணார காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது.

இந்த கோயிலுக்கு வருபவர்கள் பாலை எடுத்து வருகிறார்கள் பால் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது அது மட்டுமன்றி அனைத்து வகையான கனிகளையும் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். பக்கத்திலே நின்று அனைத்து அபிஷேகங்களையும் கண்ணார காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது படியேறி வந்த கலைப்பு தீர்ந்தது. தரிசனம் முடித்து பால் பிரசாதங்களை பெற்றுக்கொண்டு வெளியே வந்து மன நிம்மதியுடன் அங்கிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம். 

கடுமையான வெயிலாக இருந்தாலும்  இறை அருளால் நல்ல முறையில் கோவிலின் அடிவாரம் வந்தடைந்தோம்.  காரினை வெயிலில் நிறுத்தி இருந்ததனால் காரின் உள்ளே இருந்த மற்ற செடிகள் வெயிலின் தாக்கத்தால் வாடி கருகி இருந்தது. மற்ற கோயில்களில் மரக்கன்று நட முடியாது என்பது மனதிற்கு சற்று வருத்தமாக இருந்தது. இறைவனை தரிசித்த மகிழ்வுடன் வண்டியை எடுத்துக்கொண்டு குளித்தலை கூட்டு ரோட்டில் இருக்கின்ற ஒரு சைவ உணவகத்தில் மதிய உணவை உண்டு விட்டு அங்கிருந்து அடுத்த கோயிலுக்குகிளம்பினோம்.


திருஈங்கோய்மலை

அடுத்த கோயிலான திருஈங்கோய்மலை அங்கிருந்து 15 நிமிஷ பயணம் 13 கிலோமீட்டர் காவிரி பாலத்தை கடந்தால் முசிறி தொட்டியம் சாலையில் ஒரு 500 மீட்டர் உள்ளே  இந்த மலை அமைந்துள்ளது. அந்த மலையின் அடிவாரத்தில் சென்று காரினை நிறுத்தி விட்டு  அங்கு இருந்த போகரின் கோவிலினை போகர் வாழ்ந்த இடத்தினை பார்த்து விட்டு மலையேற ஆரம்பிக்கும் பொழுது மணி சரியாக 2:00 மணி வெயில் ஆனால் இந்த கோவிலில் வெயிலின் தாக்கம் பக்தர்களுக்கு படாமல் இருப்பதற்காக ஒரு வெள்ளை நிற ஹீட் ரெசிஸ்டன்ஸ் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது அதனால் வெயிலின் தாக்கம் தெரியாமல் சுலபமாகவே மலை ஏற முடிந்தது.

இந்த கோயிலும் தமிழக அரசால்  வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஒரு வழியாக மேலே ஏறி சற்று ஓய்வெடுத்துக் கொண்டு உள்ளே  அங்கு கண்ணை மூடிக்கொண்டு கருவறையில் முன்னே 15 நிமிடம் தவம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஐயர் வந்து தீபம் காண்பித்து தீபத்தின் ஒளி பிம்பம் சிவலிங்கத்தின் மீது சத்துருவமாக தெரிவதை விளக்கி கூறினார். இது மரகத லிங்கத்தின் சிறப்பம்சமாகும். இறைவனை வணங்கி விட்டு கோவிலை சுற்றி வந்து கோயிலை விட்டு வெளியே வந்தோம்.

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து, காவேரி நதியைக் கடந்து செல்கையில், அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர், ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது, ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

இத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு.முன்னர், ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.

 

ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.அகத்திய மாமுனிவர், ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.

பார்வதி தேவி, இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.மரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும், சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள், இம்மரகத நாதர் மீது படிவது, இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு.

இக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.

திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும், ஒரே நாளில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.நிறைவாக இறைவனை தரிசித்த மகிழ்ச்சியில் கோவிலை விட்டு அடுத்த கோவிலுக்கு கிளம்பினோம் .

ஆனால் காலையில் கடம்பரை எங்களால் காண முடியவில்லை என்ற ஏக்கத்துடன் கோவிலில் இருந்து கிளம்பி நேராக பயண களைப்பு தீர்வதற்காக குளித்தலை  திருச்சி  சாலையில் இருக்கும்  காவிரி பாலத்தின் கீழே காரினை நிறுத்திவிட்டு ஆனந்தமாக காவிரி ஆற்றில் 45 நிமிடம் குளியல் . குளியல் முடிந்த பிறகு காலையில் எங்களால் காண முடியாமல் போன கடம்பன் ஈஸ்வரர் கோவில் தரிசனத்தை பார்த்து விடலாம் என்று முடிவு செய்து கடம்பர் கோயிலுக்கு சென்றோம்.கோவில் திறந்திருந்தது மிக்க மகிழ்ச்சியாக கோவிலை சுற்றி வந்து தரிசனம் செய்தோம் .

கடம்பவனேசுவரர் கோயில்

கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65-ஆவது தேவாரத்தலமாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை. சப்த கன்னியர்கள், அகத்தியர், கண்ணுவ முனிவர், முருகன் ஆகியோர் இச்சிவாலயத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர்.அரக்கன் தூம்ரலோசனன் என்பவனை அழிக்க அம்பாள் துர்க்கையம்மன் வடிவில் சென்றாள். அரக்கன் துர்க்கையுடன் கடுமையாக போர் செய்தான்.


அரக்கனிடமிருந்த வரத்தால் துர்க்கையின் பலம் குறைந்தது. அவள் சப்தகன்னியர்களை துணைக்கு அழைத்து போரிடச் செய்தாள். அரக்கன் அங்கிலிருந்து ஓட, அவனை துரத்தி சென்ற பிராம்மி, மாகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டா எனும் சப்த கன்னியர்கள் முனிவரை அரக்கன் என்று எண்ணி அழித்தனர். அதனால் கொலைப்பாவமான பிரம்மஹத்தி தோசம் பற்றிக் கொண்டது. அத்தோசத்தினை நீக்க இத்தலத்தில் உள்ள கடம்பவனநாதரை வழிபட்டனர் சப்த கன்னியர். 

இத்தலத்தின் வரலாறாக சொல்லப்படுகின்ற மற்றொரு கதையில் தூம்ரலோசனன் சப்த கன்னியரை துரத்தி வர அவர்கள் சிவபெருமானின் பின்னே ஒளிந்து கொண்டார்கள். இறைவன் சப்த கன்னியருக்கு அடைக்கலம் தந்து அரக்கனை அழித்தார்.

இச்சிவதலத்தின் கருவறையில் இறைவன் கடம்பவனநாதரின் பின்புறத்தில் சப்த மாதர்கள் உள்ளனர். மூலவரின் சன்னிதியில் சப்த மாதர்கள் இருப்பது சிறப்பாகும்.

சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டி துர்க்கையாவார். அதனால் இராகு காலத்தில் துர்க்கைக்குரிய வழிபாட்டை மூலவர் சன்னிதியிலேயே செய்கின்றனர். மேலும் இச்சிவாலயத்தில் துர்க்கையம்மன் சன்னதி தனியாக இல்லை.சப்த கன்னியர்கள் தங்கள் பிரம்மஹத்தி தோசத்தினை போக்க இத்தல மூலவரை வழிபட்டுள்ளனர்.

வேதசன்மா என்ற ஓர் அந்தணர், தவம் புரிந்து, மதுரையில் நிகழ்ந்த திருமணக்கோலத்தை இத்தலத்தில் தரிசித்தார்.

அகத்தியமுனிவர், கன்வ முனிவர், மகாவிஷ்ணு, பிரம்மதேவர், முருகப்பெருமான் ஆகியோர் ஈசனை வழிபட்டு பேறுபெற்றார்கள் என்றும், கடம்பர் உலா தெரிவிக்கிறது.

மூன்று கோயில்களையும் ஒரே நாளில் பார்த்த சந்தோஷத்தில் 5.35 மணிக்கு அங்கிருந்து அடுத்த கோயிலான கரூரில் இருக்கும் வெஞ்ச மாங்கூடலூர் கிளம்பினோம்.



வெஞ்ச மாங்கூடலூர் 

வெஞ்ச மாங்கூடலூர் கோயிலுக்கு சரியாக 5:50 க்கு கிளம்பி 64 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த கோயிலை ஒன்றேகால் மணிநேரம் பயணம் செய்து சரியாக 7 .05 மணிக்கு கோவிலை அடைந்தோம் கோவிலுக்கு செல்லும் பாதைகள் மிக அழகாக நேர்த்தியாக அமைக்கப்பட்டு ,கிராமங்கள் மிகவும் தூய்மையாக இருந்தது சாலைகள் நேர்த்தியாக போடப்பட்டு பயணம் செய்வதற்கு ஏற்றதாக இருந்தது.

இந்த கோவில் வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னனால் கட்டப்பட்டது.மேலும் இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும்; அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது.

இத்தலத்தில் சுந்தரரின் பாட்டில் மகிழ்ந்த இறைவன் கிழவி வேடம் பூண்டு சுந்தரரின் பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் கொடுத்தார் என்பது தொன்நம்பிக்கை.இது தேவேந்திரன் வழிபட்ட தலமாகும்.

கோவில் மிகவும் தூய்மையாக பார்ப்பதற்கு அழகாக ரம்யமாக இருந்தது எல்லாவித சிற்பங்களும் புதுப்பிக்கப்பட்டு நேர்த்தியாக இருந்தது கோவிலில் மிகுந்த அமைதியானசூழல் இருந்தது கோயிலின் நுழைவு வாயிலிருந்து 20 படிக்கட்டு இறங்கினால் தான் கோவிலின் பிரகாரம் இருக்குமாறு இந்த கோவில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அன்று குருபூஜை என்பதால் அனைத்து நாயகன் அவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இருந்தது. மிக திருப்தியாக இறைவனை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கரூர் பசுபதிஸ்வரர் கோயிலுக்கு  கிளம்பினோம்.

 

கரூர்

அங்கிருந்து 20 கிலோமீட்டர்  பயணம் செய்து நாங்கள் அடைந்த கோயில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கரூர் . கோயிலை அடைந்து காரை நிறுத்திய உடனே மழை தூர ஆரம்பித்துவிட்டது . கல்யாணபசுபதீசுவரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு,தனி ஆலயம் உள்ளது.

இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது.

மூலவர் பசுபதீசுவரர், சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார், சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில், புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் சித்தர் கருவூரார் சன்னதியும், ராகு, கேது பாம்பு சிலைகள் உள்ள சன்னதியும் உள்ளன.

புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில்அமைந்துள்ளன. 

படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும்,'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

நாங்கள் கோயிலை நெருங்கும்போது கோவிலின் உள்ளே ஏதோ திருவிழாக்கள் நடப்பது போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு கொண்டிருந்தது அவசர அவசரமாக கோவில் உள்ளே சென்றால் சரியான கூட்டம் உள்ளே கல்யாண உற்சவம் நடந்து கொண்டிருந்தது இறைவனை தரிசிக்க வேண்டும் என்பதற்காக அத்தனை கூட்டத்தையும் தாண்டி உள்ளே சென்று முதலில் இறைவனை தரிசனம் செய்து விட்டு அம்பாளை தரிசனம் செய்து வெளியே வந்தால்  மழை இன்னும் விடவில்லை மழையில் நனைந்து கொண்டே கருவூரார் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்து அங்கு அமர்ந்து தியானம் செய்துவிட்டு அதன் பிறகு கல்யாண உற்சவத்தை பார்க்க வெளியே வந்தோம். உற்சவம் முடிந்து இறைவன் கை  தேரில் அமர்ந்து ஊர்வலம் போக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. கோயிலை விட்டு வெளியே வந்து அங்கு  உள்ள மடத்தில் பிரசாதம் வழங்கிக் அது ஒரு வகையான உப்புமா என்று சொல்லலாம் இந்த

பிரசாதத்தில் உண்ணும் பொழுது எங்கோ எனது அன்னையின் பக்குவத்தில் செய்த உப்புமா நினைவுக்கு வந்தது மிக சுவையாக அந்த பிரசாதத்தை செய்திருந்தார்.  இங்கு கோவிலின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டு அங்கிருந்து  ஓசூர் கிளம்பினோம்.

வரும் வழி எங்கும் கடுமையான மழை காரினை 40 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்ட முடியவில்லை. சேலத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பின்பு தர்மபுரி ராயக்கோட்டை வழியாக ஓசூர் செல்லலாம் என்று முடிவு செய்தோம்.  வழி நெடுகிலும் கடுமையான மழை எங்கு பார்த்தாலும் மழை நீர் வழிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது ஒரு சில இடங்களில் காரின் டயர் முமுழுகும்  அளவிற்கு தண்ணீர். தொரப்பள்ளி வழியாக வந்து சுந்தரபாண்டியனை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து அனைவரையும் அவர்களின் வீடுகளில் பத்திரமாக விட்டுவிட்டு நான் மூன்று முப்பது மணி அளவில் எனது வீட்டினை அடைந்தேன்.

இந்த மூன்றாவது சுற்றில் அனைத்து கோயில்களிலும் எங்களுக்கு திவ்யமாக தரிசனம் கொடுத்து எங்களது பயணம் எந்தவித தங்கு தடையும் இன்றி நடைபெறஅருள் புரிந்த இறைவனுக்கு மிகுந்த நன்றி எங்களது 274 சிவ ஆலயங்களில் தரிசனம் மேலும் கிடைத்திட இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டி விடைபெறுகிறேன் ஓம் நமச்சிவாய ..

அன்புடன்

நா. பாலச்சந்தர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

274 பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - ஒரு கண்ணோட்டம்